search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு விழாக்கள்"

    அரசு விழாக்கள் மற்றும் கூட்டங்களில் அசைவ உணவுக்கு தடை விதிக்கக்கோரி பாஜக எம்பி பாராளுமன்றத்தில் தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளார். #WinterSession #PrivateMembersBill
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அரசு தாக்கல் செய்த பல்வேறு மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், தனி நபர் சார்பிலும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மக்களவையில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    மேற்கு டெல்லி தொகுதி பாஜக எம்பி பர்வேஷ் சாகிப் சிங் தாக்கல் செய்துள்ள தனி நபர் மசோதாவில், அரசு விழாக்கள் மற்றும் கூட்டங்களின்போது அசைவ உணவு வழங்குவதை தடை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதேபோல், அரசு சின்னங்கள் (இலச்சினைகள்) மற்றும் பெயர்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் சட்டத்தில் திருத்தம் கேட்டு மற்றொரு மசோதாவும் தாக்கல் செய்துள்ளார்.


    விளையாட்டு மோசடிகளை தடுத்து அபராதம் விதிக்கவும், ஆன்லைன் கேம்களை கட்டுப்படுத்தவும் பயனுள்ள அமைப்பை உருவாக்க கோரி காங்கிரஸ் எம்பி சசி தரூர் தனி நபர் மசோதா தாக்கல் செய்துள்ளார்.

    வேலை நேரத்திற்குப் பிறகும், விடுமுறை தினங்களிலும் வேலை தொடர்பாக வரும் தொலைபேசி அழைப்புகளை ஏற்க மறுப்பதற்கு உரிமை அளிக்கும் வகையில், தொழிலாளர் நல ஆணையத்தை உருவாக்க கோரி தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி சுப்ரியா சுலே ஒரு மசோதா தாக்கல் செய்துள்ளார்.

    எல்ஜிபிடி சமூகத்தினருக்கு ராணுவத்தில் சம உரிமை வழங்கும் வகையில் ராணுவச் சட்டத்தில் திருத்தம் கோரி பாஜக எம்பி ஜகதாம்பிகா பால் மசோதா தாக்கல் செய்துள்ளார்.

    மக்களவையில் நேற்று மட்டும் 85க்கும் மேற்பட்ட தனிநபர் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #WinterSession #PrivateMembersBill
    ×